Sunday, June 12, 2016

சொல்வதற்கு ஒன்றுமில்லை

அது ஒரு விசாலமான மைதானம். நடுவில் ஒர் ஆலமரம். ஆலமரத்தடியில் அமர்வதற்கேற்றார் போல சுற்றி தின்னை போல ஒரு வட்ட அமைப்பு . அருகிலே ஒரு மெட்ரிகுலேஷன் பள்ளி. அது பள்ளிக்குச் சொந்தமானதாய்த் தான் இருக்க வேண்டும். அங்கே தான் அவன் அமர்ந்திருந்தான். சூரியன் மறைப்போவதாய் அறிவித்து மேற்குப்பகுதியின் எல்லையில் நின்றிருந்த நேரம்.
அவன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கிறான். அவளை பெண் என்று சாதாரனமாய் சொல்ல முடியாது. படைத்தவனே பார்த்து பிரமிக்கும் வண்ணம் அவள் ஒரு பேரழகியாய் இல்லாவிட்டாலும், நம் கண்களை அகல விரித்து பார்க்க வைக்கும் அளவுக்கு அழகியாய் இருந்தாள். ஆனால் அவள் தேடி வந்து பேசும் அளவுக்கு அவன் ஒன்றும் பெரிய அழகன் இல்லை.  ரொம்பவும்  சாதாரன மனிதன் தான்.
அவர்கள்  பேச்சிலிருந்து அவர்கள் பால்யத்தில்  ஒன்றாக படித்தவர்கள் என்று தெரிகிறது. அவள் அவனை அடையாளங்கண்டு அவன் பெயரைச் சொல்லி அழைத்தவுடனே அவன் ஆச்சர்யமானான். அவள் தன்னை யாரென்று அறிமுகப்படுத்திக் கொண்டதும் தன்னை  ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
இருவரின்  அந்யோன்யத்தைப் பார்க்கும் போது யாராய் இருந்தாலும் அவரது பால்யப் பருவம் நினைவில் வரத்தான் செய்யும்
பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின் அவள் தான் அந்தப்  பள்ளியில் வேலை செய்வதாயும்,  ஸ்பெஷல்  க்ளாஸ் முடித்துவிட்டு செல்வதால் நேரமாவதாகவும் சொன்னாள்.
அவனைப்பற்றி அவன் சொல்ல வேண்டும். ஆனால் அவன் எப்படி சொல்வது எதைச்சொல்வது என்று யோசித்தபடி இருந்தான். அவள் வற்புறுத்திக்கேட்கவே அவன் சொல்ல வேண்டியதாய் ஆயிற்று.
நேற்று வரை நல்லபடி போய்க் கொண்டிருந்த அவன் வாழ்க்கையில்  புயல் அடித்தது போல, இன்று அவன் தன்னுடைய நிறுவனத்திலிருந்து ஆட்குறைப்பு நடவடிக்கை மூலம் வெளியேற்றப் பட்டிருக்கிறான். அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில், தன் மனம் போன போக்கில் நடந்த அவன் அங்கே வந்து அமர்ந்து இருக்கிறான்.
நேற்று வரை ஒரு பிரச்சனையும்  இல்லாத வாழ்க்கை வாழ்ந்தவன்  வாழ்க்கையே இனி பிரச்சினையாகப்  போகிறது. தவறு செய்து தண்டனை பெற்றிருந்தால்  கூட பரவாயில்லை. நேற்று வரை நிறுவனத்துக்கு நாயாய் உழைத்ததற்கு அவன் நிறுவனம் தக்க சண்மானத்தை வழங்கி விட்டது. ஆட்களைக்  குறைப்பது தான் செலவைக்  குறைக்க வழியென்றால் அதிகம் சம்பாதிக்கும்  வர்க்கத்தில்  தானே கை வைக்க வேண்டும். அவனைப் போல் நடுத்தர மனிதர்களின்  சோற்றில்,  கை வைத்தால் கூட பரவாயில்லை. மண்ணை வாரி இறைத்தார்கள்.
கலங்குகிற கண்களில் இருந்த கண்ணீர் அவள் இருப்பதால் வரமாட்டேன் என அடம் பிடித்தது. அவனுக்கு எப்படி என்ன ஆறுதல்  சொல்வது எனத்தெரியாமல் அவள் மெளனமாய்  நின்றாள். ஆனால் அப்படி அவளால் வெகு நேரம் நிற்க முடியாது. எனவே அவள் தன் திருவாய் மலர்ந்து அவனிடம் பேச ஆரம்பித்தாள்.
பாகம் - 2
அவன் பைக்கில் வேகமாகச் சென்று கொண்டு இருந்தான்.வெய்யில் சுள்ளென்று முகத்தில் அடித்தது. ஆனால் அவன் மனம் தீவிரமாய் எதையோ சிந்தித்துக் கொண்டு இருந்தது. அவன் வாழ்க்கை எப்படி மாறி விட்டது என நினைத்து பார்த்தால்  அவனால் ஆச்சர்யத்தை தவிர்க்க முடியவில்லை. அவளை சந்தித்த நாள் அவன் வாழ்க்கையில் அந்த பெரிய மாற்றம் . வாழ்க்கையில் மிகப் பெரிய அடியை தந்த இறைவனை அவன் நிந்தித்த நாள் அது. ஆனால் இறைவன் எவ்வளவு கருணை உள்ளவன் என்று அவனால் இன்று உணர முடிகிறது. சாப்பிடாமல்  அடம்பிடிக்கும்  குழந்தையை அம்மா அடிக்கும் போது அவளைக் கொடுமைக்காரி என்றா சொல்வோம். இறைவன் அப்படித்தான் அவன் வாழ்க்கையில் அவனை லேசாக வருத்தி மிகப் பெரிய நன்மையை செய்திருக்கிறார். ஆனால் அத்தகைய இறைவனின் கருணையை அவனால் அன்று உணர முடியாமல் போனது எவ்வளவு பெரிய குற்றம்.
இறைவன் தன்னால் நேரடியாக வர முடியாத போது பிற மனிதர்கள்  மூலமாக வந்து தனக்கு உதவுவார் என்று கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் அவனால் அது தன் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை உணர முடிகிறது.
அவள் நிச்சமாய்  பெண்ணாய்  இருக்க முடியாது. தன் வாழ்வில் ஒளி ஏற்ற வந்த தெய்வம். அவளை அன்று அவன் சந்தித்திராவிட்டால் அவன் வாழ்க்கை வேறு திசையில் சென்றிருக்கும். நிச்சயம் அந்த திசை அவன் இப்போது இருக்கிற திசைக்கு நேர் எதிராகத் தான் இருந்திருக்கும்.
இன்றைக்கு அவன் யார்? அவன் நிறுவனத்தை விட மூன்று மடங்கு பெரிய நிறுவனத்தில், இரண்டு மடங்கு அதிக ஊதியத்தில், மூன்று படி உயர்ந்த நிலையில் இருக்கிறான். தன்னை ஒரு பொருட்டாக மதிக்காத நிறுவனத்தை, போட்டியாளனாக கூட ஏற்றுக் கொள்ளத் தயங்கும் மிகப் பெரிய நிறுவனம் தனக்கு ராஜ மரியாதை தருகிறது. அவன் மேலிருப்பவர்களாலும், உடன் பணிபுரிபவர்களாலும், தனக்கு கீழ் வேலை செய்பவர்களாலும் தலையில் தூக்கி வைத்துக்  கொண்டாடப்படுகிறான், அவன் திறமைக்காக. ஆனால் அங்கே இவனை சீண்டுவார் இல்லை .
அவன் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணம்? இது தற்செயலா? இறைவன் செயலா? அவளால் நடந்த நிகழ்வா? அல்லது மூன்றும் கலந்த கலவையா?
ஆனால் அவளுக்கு அவன் நன்றி சொல்லியே ஆகவேண்டும். நன்றி மட்டுமல்ல. அதையும் தாண்டி ஏதேனும்......
அன்று, அவள் முதலில் பேசிய போது அவனுக்கு அது சாதாரண ஆறுதல் மொழிகளாகத்தான்  தோன்றியது.  ஆனால் போகப் போக அது தன் நெஞ்சில் மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தத் தொடங்கி  இருப்பதை  அவன் கவனிக்கத் தவறவில்லை.
'கிடைத்ததை வைத்து திருப்திப்படு' என்று தான் அவனுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் ஆனால் கிடைத்ததை வைத்து திருப்திப்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியாது என அவள் சொல்லித்தான் அறிந்தான். அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற கேள்வி நெஞ்சில் எழ அவள் தான் காரணமாய் இருந்தாள்.
தன் நிலை மிகவும் கேவலம் என்று நிைனத்தவனுக்கு, தென்னாப்பரிக்க ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட காந்தியையும், முதலில், சிகாகோ மாநாட்டில் பேச அனுமதி மறுக்கப்பட்ட விவேகாநந்தரையும்  நினைவு கூர்ந்தாள்.
அவள் பேசுகிற வார்த்தைகள் காதில் விழுந்து கொண்டிருந்த போது திடீரென அவள் பேச்சு அவனுக்கு கேட்கவில்லை. இருக்கும் இடம் தெரியவில்லை. தன்னை மறந்த நிலையில் அவனுக்குள் பெரிய மாற்றம் நிகழ்ந்து விட்டது.
அந்த நொடியில் அவனுக்குள் ஏற்பட்ட அந்த மனமாற்றம் தான் அவன் வாழ்க்கை மாறுவதற்கு காரணமாய் அமைந்தது.
இதோ அவன் அவளைப் பார்க்கத்தான் சென்று கொண்டிருக்கிறான். அவளைப் பார்த்ததும் அவளிடம் அவன் முதலில் பகிர நினைப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, அவன் தன் இன்றைய நிலையிலும் நிறைவை அடையவில்லை என்பது. இரண்டு, ஒரு சாதாரன ஸ்கூல் டீச்சர் வாழ்க்கையில் அவள் நிறைவை அடைந்து விட்டாளா எனக் கேட்பது.
தன் பைக்கை பார்க் செய்து விட்டு பிரின்ஸிபால் அறை நோக்கி நடந்தான். அவரை அவன் ஏற்கனவே அறிந்திருந்ததால்  அவரை அவன் சந்திப்பதில் அவ்வளவு சிரமம் இல்லை.
முறையான விசாரிப்புகளுக்குப்பின் தன் தோழி ஒருவர் அங்கு வேலை செய்வதாகவும், அவரை சந்திக்க வேண்டும் எனவும் அவன் கூற, அவர் பெயரைக் கேட்டார். அவன் தோழியின் பெயரைச் சொன்னதும் அப்படி யாரும் அங்கு வேலை செய்யவில்லை என்று கூறிய அவர், சுவரில் இருந்த ஒரு க்ரூப் போட்டோவை காட்டி " இவ்ளோ தான் எங்க ஸ்டாஃப் இதுல இருக்காங்களான்னு பாருங்க" என்றார்.
அவன் பார்த்தான். அதில் அவள் இல்லை.
பாகம் 3
அவள் தன் தந்தையிடம் உறுதியாய்ச் சொல்லப் போகிறாள். சொல்லித்தான் ஆக வேண்டும்.
அவனுக்கு நல்லது தான் செய்தாள் அவள். அதை அவள் அவனிடம் வெளிப்படையாய் சொல்ல முடியாது. அதை அவன் புரிந்து கொள்ளாமல், அவளை பழிவாங்க அவளைத் திருமணம் செய்யும் அளவு வந்து விட்டான். இது தெரியாமல் அவள் அப்பா அவனுக்கு அவளை திருமணம் செய்ய நினைக்கிறார்.
அவள் அப்பாவுக்கு உண்மை தெரிந்தால் நிச்சயம் இந்தத் திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளமாட்டார். அதனால் உண்மையைச் சொல்லி விடுவது என முடிவு செய்து விட்டாள்.
அவள் தன் தந்தையிடம் பெரும்பாலும் எதையும் மறைப்பதில்லை. இந்த விஷயத்தையும் அவள் முன்னமே சொல்லி இருக்கலாம். ஆனாலும் ஏனோ அவளுக்கு இது பற்றி சொல்ல வேண்டும் என்று தோன்றவில்லை.
அவளை ஒரு மனித வளத்துறை அதிகாரியாக்கி அவள் அப்பா அழகு பார்த்திருந்தார், அவளுக்கும் அந்த துறையில் ஆர்வம் அதிகம். தன்னுடைய துறையில் மிகப் பெரிய அளவில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவள்.
மனித வளத் துறையின் முதல் பணி மனித மனங்களை தன்னுடைய சக்தியை உணர வைத்து, உலகின் மிகப் பெரிய வளம், மனித வளம்தான் என நிரூபிக்க வேண்டும் என்பது அவள் எண்ணம். அதற்காகத்தான் அவள் முனைப்புடன் உழைக்கிறாள். நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் முதல் தலைவர் வரை அனைவரையும் ஒரே அளவில் மதிப்பவள் அவள். ஆம். மனிதன் என்கிற மரியாதை. இவர்கள் ஒவ்வொருவருக்கும்  உள்ள திறமையை வெளிக் கொணர வேண்டும் என்பதே தனது கடமை என நினைக்கிறாள்.
வேலைக்கு ஆட்களை தேர்வு செய்வது, சம்பளம் கொடுப்பது, பணியை விட்டு நீக்குவது போன்றவை மட்டுமே தன் வேலை இல்லை என்பதை பரிபூரணமாய் அவள் உணர்ந்திருந்தாள்.
குறிப்பாக, அவள் இதுவரை யாரையும் தன் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்வதை அனுமதித்ததில்லை. அப்படிப்பட்ட சூழல் வரும் போது அதை சவாலாக எடுத்து, அந்த மனிதரின் திறமையை வெளிக்கொணர்ந்து தன் நிறுவனத்தின் சொத்தாக மாற்றி இருக்கிறாள்.
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் அவன் வாழ்க்கையில் அவள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தன் தோழியின் நிறுவனத்தில் செய்யப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கையைப்பற்றிய ஒரு உரையாடலின் போது, தன் தோழியிடம் அவள், "நீங்கள் தேவையில்லை என்று வெளியேற்றும் ஒரு மனிதனின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் காட்டுகிறேன்" என்று சவாலாய்ச் சொன்னவள் செய்தும் காட்டி விட்டாள்.
அவன் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் அவள் அவன் தோழியின் பெயரைச் சொல்லி அவனை சந்தித்தாளேயன்றி வேறெந்த சயநல எண்ணமும் அவளுக்கில்லை. இதை அவள் அவனிடம் சொல்ல முடியுமா? சொன்னால் அவன் நம்பத் தான் போகிறானா? அவனை அவள் ஏமாற்றியதாய் எண்ணி அவள் வாழ்வில் விளையாட வந்திருக்கிறான் என்பதை அவள் உணர்ந்ததால்தான் இந்த மனப் போராட்டம்.
தன் சவாலில் வென்ற அவள், அவன் அவளைக் கண்டு பிடிக்க முனைவான் என்று எண்ணிப் பார்க்கவில்லை.
அவள் வேலை செய்ததாய் சொன்ன பள்ளியில் விசாரித்த அவன், வந்தது தன் தோழியல்ல என்பதையும் மோப்பம் பிடித்து, இவளை எதேச்சையாய் எங்கோ பார்த்து பின்னாலேயே வந்து, "ஏன் என் ஃபிரென்டுன்னு சொல்லி என்ன ஏமாத்துன ?" எனக் கேட்க, வெலவெலத்துப் போனாள். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, அவனை யாரென்றே தெரியாதது போல் நடித்து விட்டாள்.
அவன் மேலும் இந்த விஷயத்தில் எதையாவது செய்யும் முன், அவனை தடுக்க, ஒரு வழியாய் அவன் நண்பனை வளைத்து, அவன் மூலமாய் அவனை ஒரு சைக்காட்ரிஸ்டிடம் அழைத்துச் செல்லச் சொல்லி, அவர் மூலமாய் அன்று நடந்த சந்திப்பு அவனின் கற்பனையன்றி வேறில்லை என நம்ப வைத்தாள்.
அதன் பிறகு அவனை மறந்து நிம்மதியாய் இருந்தவள், சில Nமாதங்களுக்குப் பின் அவனை தன் வீட்டிலேயே கண்டதும் துணுக்குற்றாள்.
தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதாய் தன் தந்தை சொன்ன போது, "அப்பா, என் வாழ்க்கையில் எல்லா விஷயத்தயும் எனக்காக பார்த்துப் பார்த்து சரியா செஞ்ச நீங்க, இந்த விஷயத்துலயும் சரியாத்தான் செய்வீங்க. நான் மாப்ளயை பாக்கக் கூடத் தேவையில்லைப்பா. நீங்க யாரைச் சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறேன்" என்று திடமாகச் சொன்னாள்.
அது எவ்வளவு தவறு என இப்போது உணர்கிறாள். அவள் வீட்டுச் சோபாவில் மாப்பிள்ளை என்ற பெயரில் அவனல்லவா வந்து உட்கார்ந்து இருக்கிறான். அவனுக்குப் பிடித்தால் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் அவளைக் கேட்க வேண்டாம் என்றும் அவள் அப்பா சொல்லி இருக்கிறார். அவன் ஏற்கனவே திருமணத்திற்கு சம்மதம் சொல்லி விட்ட தாயும், திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடப்பதாயும் அவள் அம்மா கிசுகிசுத்தாள்.
அவன் அவளை பார்த்த பார்வை, "மவளே, வாடி உன்ன வச்சுக்கறேன்" என்று சொல்வது போல அவளுக்குப்பட்டது. அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக அவளுக்கு ஃபோன் செய்த அவன் அவளிடம் தனியாகப் பேச அழைத்த இடம் எது தெரியுமா? அவர்கள் முதலில் சந்தித்த அதே ஆலமரத்தடி தான். அவளுக்கு எல்லாம் உறுதியாகி விட்டது. அவள் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
நீண்ட யோசனைக்குப் பிறகு தன் தந்தையிடம் உண்மையைச் சொல்லி கல்யாணத்தை நிறுத்தி விடலாம் என முடிவு செய்தாள்.
இதோ அவள் அப்பா வந்து விட்டார். அவரிடம் அவள் நடந்தது அத்தனையும் பொறுமையாய்ச்சொல்லி, "இந்தக் கல்யாணம் வேணாம்பா. நிறுத்திடுங்க ப்ளீஸ்" என்றாள்.
அவள் தந்தை பொறுமையாய் யோசிக்க ஆரம்பித்தார். அவர் முடிவு எப்போதும் சரியாகத்தான் இருக்கும். அவளால் முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் போதெல்லாம் அவர் கொடுக்கும் ஒரு ஹிண்ட் அவளுக்கு மிகப் பெரிய ஒரு வெளிச்சத்தைக் கொடுக்கும்.
அவர் தொண்டையை கணைத்துக் கொண்டு சொன்னார் "நீ நல்ல விஷயம் தானே பண்ணே. எதுக்கு தயங்கறே தைரியமா உண்மையை சொல்லிடு. எனக்கு தெரிஞ்சு அந்தப் பையன் பழியெல்லாம் வாங்கற மாதிரி ஆள் கெடையாது. நீ உண்மையைச் சொன்னதுக்கு அப்புறம் அவனோட ரியாக்ஷனை வெச்சு, கல்யாணத்த நிப்பாட்டலாமா வேணாமான்னு முடிவு பண்ணிக்கலாம்" என்று. அவளுக்கும் அது சரியெனப் பட்டது. அவள் அவனை சந்திக்கத் தயாரானாள்.
பாகம் 4
அவன் அவளுக்காக காத்திருந்தான். அவர்கள் முதன் முதல் சந்தித்த அதே ஆலமரத்தடி . அவள் வருவதை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டான்.
தன் சிறு வயதில் தந்தையை இழந்து, வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த அவனுக்கு அப்போதய ஒரே ஆறுதல் அவனது பள்ளித் தோழி தான். அவளுக்காகத் தான் அவன் எல்லாவற்றையும் செய்தான். ஏனென்றால் அந்த வயதில் அவனை புரிந்து கொண்டவள் அவள் மட்டும் தான். ஆனால், அவள் தன் தந்தையின் பணி மாற்றலால் பள்ளியை விட்டுப் போய் விட்டாள். அவள் நினைவுகளுடனேயே அவன் காலத்தைக் கழித்தான். படித்து முடித்து வேலை கிடைத்தவுடன் தான் வேலை பார்த்த ஊரிலேயே அம்மாவையும் அமைத்துக் கொண்டான்.
ஆனால் திருமணத்தைப் பொறுத்த வரையில் தன் தோழியைத் தவிர வேறு யாரையும் மணப்பதில்லை என்று உறுதியோடு இருந்தான். இதுகுறுத்து அவன் நண்பர்கள் கேலியையெல்லாம் பொருட்படுத்தாது தன்னை மணக்க தன் தோழி தன்னை தேடி வருவாள் என உறுதியாய் நம்பினான்.
அவன் நம்பியபடி அவன் தோழி அவனைத் தேடி வந்தாள். ஆனால் அந்த சூழலில் அவன் அவள் வருகையை ரசிக்க முடியவில்லை. ஆனாலும், அவள் அவனுக்கு ஆறுதல் தந்து அவன் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்துக்கு வழிவகுத்தாள். அந்த சந்திப்புக்குப் பின் அவனுக்கு அவளைப் பற்றி தெரிந்த கூடுதல் விஷயம் அவள் அந்தப் பள்ளியில்தான் வேலை செய்கிறாள் என்பது மட்டும் தான்.
தன் சூழ்நிலைகள் சாதகமாக நடந்த பின் அவளைத்தேடி அந்தப் பள்ளிக்குச்  சென்றால் அங்கே அவள் இல்லை.
சில நாட்களுக்குப் பின் அவளை எதேச்சையாக சந்தித்த போது அவள் சொன்னது, தான் அவள் இல்லை என .
அப்படி என்றால் தான் சந்தித்தது யார்? அவள் உண்மையில் தன் பள்ளித் தோழி தானா? அப்படி எனில் அவள் ஏன் அந்தப் பள்ளியில் வேலை செய்வதாகப் பொய் சொல்ல வேண்டும்? என பல கேள்விகளுடன் அவன் குழம்பிய போது தான், அவன்அந்த சைக்காட்ரிஸ்ட்டை போய் சந்தித்தான்.பல்வேறு சோதனைகளுக்குப் பின் அவர் சொன்னார் அப்படி ஒரு சந்திப்பே நடக்கவில்லை, அது ஒரு பிரமை என்று.
அதை அவன் ஏற்றுக் கொள்வதைத்தவிர வேறு வழி இல்லை. ஆனாலும், சில நாட்களுக்குப் பிறகு அவனது உள் மனம் சந்திப்பு பிரமை இல்லை எனச் சொன்னது.
நீண்ட யோசனைக்குப் பின் தான் ஒரு டிடெக்டிவ்வாக மாறுவதே இதற்கு வழி என முடிவுக்கு வந்த அவன் உடனடியாய் களத்தில் இறங்கினான்.
தான் படித்த பள்ளியில் இருந்து தொடங்கிய அவன், கடுமையாக முயன்று, ஒரு கைதேர்ந்த டிடெக்டிவ் போல செயல்பட்டு அவன் தோழியைத் தேடி கண்டுuடித்தான்.
எங்கு தொடங்கினானோ அங்கேயே வந்து சேர்ந்தான். டிடெக்டிவ் முடிவுகள் அவளைத் தான் அவளது பள்ளித் தோழி என்றன. மீண்டும் அதே பழைய கேள்விகள். தன் நண்பன் ஒருவனுக்காக மருத்துவமனை சென்ற போது அங்கே அவளைக் கண்ட அவன், தெரிந்த மருத்துவரிடம் அவளுக்கான ட்ரீட்மன்ட் பற்றி கேட்க அவனுக்கு பேரதிற்சி.
அவளுக்கு பதினைந்து வயதில் விபத்து ஏற்பட்டு பழைய நினைவுகள் மறந்து விட்டதாம். அவள் முழுமையாய் குணமடைந்த பின்னும் நினைவுகள் மட்டும் திரும்பவே இல்லையாம். அவள் அதன் பின் ரொட்டீன் செக்கப்புக்காக வந்திருக்கிறாளாம்.
அவனுக்கு தலை சுற்றியது. அவள் தன் தோழி என்று அவனுக்குத் தெரியும், அவளுக்குத் தெரியாது. ஆனால், அவள் தான் சொன்னாள் நான் உன் தோழி யென்று, அதே அவள் தான் சொல்கிறாள் யாரெனத் தெரியாதென்று. குழப்பத்தில் மயங்கிய அவன் இரண்டு நாள் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.
மறுநாள் நன்றாகத் தூங்கி எழுந்து இனிமேல் அவளைப் பற்றி சில நாட்கள் நினைக்கக்கூடாது என்று நினைத்து எழுந்தால், அவன் முழித்ததே அவள் முகத்தில் தான். அவன் கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த அலமாரியில் மேக்ஸ் சைஸ் போட்டோவில் " உன்னை விட மாட்டேன்" என்று சொல்வது போல சிரித்துக் கொண்டே அவள் படம்.
தன் பையன் போகிற போக்கே சரியில்லை என்று கவலைப்பட்ட அவன் அம்மா, கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகும் என்று புரோக்கரைப் பார்க்க , அந்த புரோக்கர் மூலமாக அந்தப் படம் அவன் வீட்டுக்கு வந்திருந்தது.
"இந்தப் பெண் பாக்கலாமா" என அவன் அம்மா கேட்க, "எனக்கு பொண்ணு ஒகே. நான் பொண்ணல்லாம்  பாக்கல. நீங்களே பார்த்து பேசி முடிச்சிருங்க" என்றான். அவனைப் பொருத்தவரையில் அவள் அவன் தோழி என முடிவாகிவிட்டது. எது எப்படி இருந்தால் என்ன?
" அந்தப் பொண்ணும் அப்படித்தான் சொல்லுச்சாம். அப்ப பெரியவங்க நாங்க பேசிட்டு, ஒகேன்னா முடிச்சுரலாம்" என்றார் அந்தம்மா.
"சாரி . கொஞ்சம் லேட்டாயிடுச்சி" என்ற குரல் கேட்டு சுய நினைவுக்கு வந்தான் அவன்.


No comments:

Post a Comment